புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 53(2) க்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்களுக்குப் பொருந்தும் ஆர்பி சட்டம் பிரிவு 53(2) ஆனது, ஒரு வேட்பாளர் நேரடியாக போட்டியிடும் மற்றும் போட்டியிடாத தேர்தல்களின் முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறையை வகுக்கிறது.
அதன்படி, ஒரு தொகுதியில் ஒரேயொரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்டால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில், வாக்காளர்கள் நோட்டாவை தேர்தெடுப்பது தடுக்கப்படுகிறது.
இதனால் போட்டியிடும் வேட்பாளர் மீது ஏதேனும் கிரிமினல் குற்றங்கள் இருக்கும்பட்சத்தில் அவர் மீது வாக்காளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் போகிறது. இது, வாக்காளரின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறுவதாகும். மேலும், தேர்தல் ஆணையம் போட்டியின்றி வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கூடாது. ஆர்பி சட்டத்தின் பிரிவு 53(2)ஐ அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: "பல்வேறு விஷயங்களை விவாதிப்பதற்கான முக்கியமான தளம்" -பிரிக்ஸ் மாநாடுக்கு செல்லும் முன்பு பிரதமர் வெளியிட்ட பதிவு
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத சூழலில், அவர்களுக்கு எதிர்மறையாக வாக்களிக்கும் விதமாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் "NOTA" -வை தேர்வு செய்யும் முறை, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இது, பிரிவு 19(1)(a) இன் கீழ் வாக்காளர்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்