சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாம் வணிகமோ வாணிபமோ செய்ய வரவில்லை, தமிழ்நாட்டைச் சீரமைக்க வந்துள்ளோம். செயல்படாமல் இருக்கும் அரசை சீரமைப்பதே நமது கடமை.
நேர்மையாளர்கள் கட்சிக்கு வாருங்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் பளு அதிகம். நேர்மையாளர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாருங்கள். வியாபாரம்தான் முக்கியம் மக்கள் முக்கியம் அல்ல என்று நினைப்பவர்கள் வர வேண்டாம். இப்போதுதான் சிலரை கட்சியிலிருந்து அனுப்பிவைத்துள்ளோம். மக்கள் நீதி மய்யம் ஒரு குடும்பம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஐந்தாவது பிறந்தநாளை 500 ஆக்க வேண்டியது தொண்டர்களின் கைகளில்தான் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாட்டை விரைவாகத் தொடங்க வேண்டும்.
நாளை (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கைக்கு சிறு, சிறு காரணங்களைச் சொல்லி நம்மை வெளியேற்ற முயற்சி செய்வார்கள். முதலில் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். இதனைத் தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தேர்தலில் அராஜகம்
இதைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அவர், "அரசியல் கட்சிகள் ஓட்டுக்கான விலையை உயர்த்தியுள்ளனர். முதலீட்டை செய்பவர்கள் போட்ட முதலீட்டை தான் எடுக்க முயற்சி செய்வார்கள், கடமையைச் செய்ய மாட்டார்கள்.
மக்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளதால்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றுவிடுமோ என எண்ணி, நேர்மைக்கு இடமளிக்காமல் அரசியல் கட்சிகள் காசு கொடுக்கின்றனர்.
இதுதான் நேர்மை என்றால் இருந்துவிட்டு போகட்டும், இதைவிட அசிங்கமாகக் கூற முடியாது. தேர்தலில் அராஜகம் தலைவிரித்தாடியது. சாதி, மத அரசியல் மட்டுமே பாஜகவிற்குத் தெரியும், அந்தக் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி இல்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திமுக நிர்வாகியைத் தாக்கியதாக ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு!