சென்னை: பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோவைக்கு வருகை தர உள்ளார். இதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அளவில் 144 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு பாஜகவிற்கு சற்று குறைவாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 144 தொகுதிகளுக்கும் பாஜக தேசிய தலைவர் என்ற முறையில் அனைத்து இடங்களுக்கும் ஜே.பி.நட்டா செல்ல உள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தவுள்ளார். ஏற்கனவே தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கக்கூடிய எல்.முருகன், நீலகிரி மக்களவை தொகுதில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
மேலும்,"வரக்கூடிய நாடாமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும்" என அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்னை குறித்தும், கூட்டணி குறித்தும், பாஜகவின் அடுத்தகட்ட வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் முக கவசம் கட்டாயம் - நியூ இயர் பார்ட்டிகளுக்கு கெடுபிடி!