சென்னை: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுடன் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 3 நாளாக 88 பேர் வந்து உள்ளனர். 4ஆவது நாளாகச் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம் உள்பட பல பகுதிகளில் உள்ள 26 பேர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
நாடு திரும்பிய மாணவர்களை பா.ஜ.க-வின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசின் சார்பில் அயலக நலம் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றார். பின்னர் அவரவா் சொந்த ஊர்களுக்குத் தமிழ்நாடு அரசின் செலவில் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், ”நான்கு மத்திய அமைச்சர்கள் சென்று எல்லா விமான நிறுவன விமானங்களையும், விமானப்படை விமானங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி மீட்டு வரப் பிரதமர் உத்தரவிட்டு உள்ளார். ஒரு வாரத்தில் மாணவர்கள் வந்து சேர்வார்கள்.
கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து உள்ளது. பிரான்ஸ், போலாந்து உள்பட 3 நாட்டு அதிபர்களிடம் மோடி பேசியுள்ளார். வாய்ப்புகள் உள்ள நாடுகளின் எல்லைப் பகுதிக்கு இந்தியர்களை வரவழைத்து நாட்டிற்கு அழைத்து வருவது பிரதமரின் நோக்கமாக உள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசிய போது முழுமையாக இந்தப் பணியில் தான் இருப்பதாகத் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது. இந்திய மாணவர்களை அழைத்து வரும் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. உக்ரைனிற்கு விசா வாங்கி படிக்கச் சென்றவர்களின் விவரங்கள் வெளியுறவுத் துறையிடம் உள்ளது.
மாணவர்கள் உணவின்றி தவிப்பு
சாலை மார்க்கமாக வந்தவர்களை இந்திய தூதரகம் மூலமாக மீட்டு வருகின்றனர். கார்கிவ் பகுதியில் வெளியே நடமாடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாகிஸ்தான், பங்காளதேசம் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியக் கொடியைப் பயன்படுத்தி வெளியே வந்து கொண்டு இருக்கிறார்கள். வேறு எந்த நாடும் முயற்சி எடுக்கவில்லை. இந்தியா தான் பேசி முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு பாஜக சார்பில் மாணவர்களின் பெற்றோரிடம் பேசி வருகிறோம். மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் பணி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் உக்ரைனிலிருந்து வந்த மாணவி பிரீத்தி சோபியா கூறுகையில், “உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள மாணவர்களை விரைவாக மீட்டு அழைத்து வர வேண்டும். இந்தியாவில் உள்ள வானிலை அங்கு இல்லை. அதிக குளிர், மற்றும் உணவு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அரசு விரைவாக மீட்க வேண்டும். மேற்கு பகுதியிலும் அபாய ஒலி கேட்க ஆரம்பித்து விட்டது. இந்தப் பகுதியில் எப்போது போர் தொடங்கும் எனத் தெரியவில்லை. கிழக்குப் பகுதியில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மாணவி கமலீஸ்வரி கூறுகையில், ”மாணவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இதைப் பார்க்கக் கூடிய பெற்றோரும் பதற்றமாகத் தான் இருக்கிறார்கள். 6-ஆவது ஆண்டு படித்து வருகிறேன். 2 மாதத்தில் படிப்பு முடிய வேண்டிய நிலை. படிப்பிலும் அரசும் உதவிட வேண்டும். இந்தியத் தூதரக அலுவலர்கள் உதவியாக இருந்தார்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:கார்கீவ்வில் இருந்து நடந்தாவது வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு அவசர உத்தரவு