புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தலைவர் த. சாமிநாதன் கூறியதாவது,
'கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகமாகி வருகிறது. பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் பேசி, கட்சிப் பாகுபாடின்றி, மாநிலத்திற்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
மத்திய அரசு அனைத்து மாநிலத்திற்கும் பாகுபாடின்றி ஒரே மாதிரியான உதவிகளை செய்து வருகிறது. மாநிலங்களுக்கு 50 விழுக்காடு தடுப்பூசியை மத்திய அரசு கொடுத்துள்ளது.
நாடு முழுவதும் 45 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆனால், மக்கள் தொற்றின் பயத்தின் விளிம்பில் உள்ள இந்த காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, நாராயணசாமி உட்பட அனைவரும் அரசியல் செய்கிறார்கள். இது குறித்து, தேசியத் தலைவர் நட்டா 2 தினங்களுக்கு முன்னர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் வெண்டிலேட்டர் 45 ஆயிரம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலத்திலுள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அந்த கடிதத்தை ஊடகத்திற்கு கொடுத்துள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலகமே பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி வருகிறது. இதுவரை மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு கோதுமை மற்றும் அரிசி வழங்கியுள்ளது.
ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநில முதல் அமைச்சர்கள் தரம் தாழ்த்தும் வகையில் பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனை புதுவை பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த வதந்தியை காங்கிரஸ் பரப்பி வருகிறது.
காங்கிரஸ் இதில் அரசியல் செய்கிறது. இதனை பாஜக தேசியத் தலைமை வன்மையாக கண்டிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போடுவது குறைவாக உள்ளது. இங்குள்ள நாராயணசாமி கரேனா தடுப்பு நடவடிக்கைகள் சரியில்லை என அறிக்கை கொடுத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
நாராயணசாமி அரசாங்கத்தில் இருந்த அதிகாரிகள் தான் இப்போதும் உள்ளார்கள். தரம் தாழ்ந்த நடவடிக்கையில் நாராயணசாமி ஈடுபட்டுள்ளார். வரும் காலகட்டத்தில் கரோனா விசயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாமல் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.