சென்னை: பாஜகவின் மூத்த உறுப்பினரான இல. கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த இல.கணேசன், 1945ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவர், அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஐந்து வயதிலேயே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளை பெறவும் அவர் தொடங்கி விட்டார்.
28 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினர்
பின்னர், கடின முயற்சியால் இளம்வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார். ஆனால், அப்போதும் அவருக்கு ஆர்எஸ்எஸ் மீதான நாட்டம் குறையவில்லை. பாஜக செயற்குழு உறுப்பினராக 28 ஆண்டுகளாக உள்ள கணேசன், இதற்கிடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தவுடனே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இல.கணேசனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று (ஆக.22) இல.கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சந்திப்புக்குப் பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
'இல.கணேசனே எனக்கு அரசியல் ஆசான்'
அப்போது அவர் பேசுகையில், 'பாஜகவுக்காக தொடர்ந்து உழைத்த மூத்த தலைவருக்கு, மணிப்பூர் ஆளுநராக ஒன்றிய அரசு பதவி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இல.கணேசன் எனக்கு அரசியல் ஆசானாகத் திகழ்ந்தவர். அரசியல்வாதிகளை செதுக்கக் கூடியவர் என்ற பெருமைக்குரியவர், இல.கணேசன்.
தமிழ்நாட்டில் 1961ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41இல் இருந்து 39ஆக குறைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்பதே பாஜகவின் நிலைப்பாடு ஆகும்.
இதுகுறித்து உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். ஒரு சில தொகுதிகளில் அதிகளவிலான வாக்காளர்கள் உள்ளனர். 20 லட்சத்திற்கும் குறைவாக வாக்காளர்கள் இருக்கும் தொகுதியில், மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, தங்களின் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
'தமிழ்நாட்டைப் பிரிப்பது பாஜகவின் நோக்கமல்ல'
தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியைக் கொண்டு செல்ல மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தெளிவாக மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பாமக தலைவர் ராமதாஸ் கருத்துப்படி, நிர்வாகத்தை விரைந்து கொண்டு செல்லவும் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது, திமுகவினர் கறுப்புக் கொடி காட்டினர். ஆனால், பாஜக ஆட்சிகாலத்தில் தான், தமிழ்நாட்டில் ராணுவத் தொழிற்சாலைகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தான் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு ராணுவத் தளவாடங்கள் தொழிற்சாலைகளால் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமூக வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: 5 வயதிலே ஆர்எஸ்எஸ் பயிற்சி... மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசனின் கதை!