சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 32வது நினைவுதினம் (Rajiv Gandhi's death anniversary) நாடு முழுவதும் இன்று (மே 21) (மே 21) அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜிவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இசைக்குழுவினர் தேசபக்தி பாடல்களை பாடினர். பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்க உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, சைதாப்பேட்டையில் உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு, கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சென்னை ராயப்பேட்டையில் சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ”ராஜிவ் காந்தி நினைவு நாள் இன்று. இந்தியாவில் பயங்கரவாதத்தை எதிர்த்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு மேலாக காங்கிரஸ் போராடி வருகிறது. பல தோழர்களை இழந்துள்ளோம். காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என பலரை இழந்தும் இன்று காங்கிரஸ் நிற்கிறது. மத நல்லிணக்கத்திற்கு ஆதரவானது காங்கிரஸ் கொள்கை. பிரிவினைக்கு வித்திடக்கூடாது என்ற கொள்கையை கடைபிடித்துள்ளது.
கர்நாடக வெற்றி ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமைக்கு ஆதரவான வெற்றி. ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்திற்கு கிடைத்த வெற்றி. வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 2000 ரூபாய் விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன என்பதை விளக்க வேண்டும். ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதன் நன்மை, எதற்காக கொண்டு வந்தோம் என்று தெரிவிக்க வேண்டும்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி எதற்கும் வாய் திறப்பதில்லை. 2000 ரூபாய் நோட்டை எதற்கு கொண்டு வந்தார்கள், எதற்கு திரும்பப் பெற்றுள்ளனர் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். அவர்களின் புதைக்குழியினை அவர்களே தோண்டிக் கொள்கிறார்கள். கர்நாடக வெற்றியை தொடர்ந்து, அதே நிலைமை தான் இந்தியா முழுவதும் கிடைக்கும்" என தெரிவித்தார்.