சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர், பாஜக நிர்வாகி பாலச்சந்தர். இவர் தமிழ்நாடு பாஜகவின் எஸ்சி - எஸ்டி பிரிவின் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டை சாமிநாதன் தெருவில் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம், அப்பகுதி மட்டுமின்றி தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.
இதில், பாஜக நிர்வாகியை கொலை செய்த பிரதீப், சஞ்சய், கலைராஜன், ஜோதி ஆகிய நான்கு பேரையும் சேலம் எடப்பாடி அருகே கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனை வைத்து, இந்த வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் இருவரையும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தினேஷ் என்ற புளிமூட்டை தினேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் கொலையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்