சென்னை: மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1ஆவது தெருவைச்சேர்ந்தவர், சதீஷ்குமார் (48). இவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டச்செயலாளராக உள்ளார். கடந்த ஏப்.14ஆம் தேதி இரவு இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
'என் காரை நான் தான் எரிச்சேன்'இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது குடும்பப்பிரச்னை காரணமாக தானே காரை எரித்துவிட்டதாகவும், நடவடிக்கை ஏதும் தேவையில்லை என்றும் எழுதிக்கொடுத்துள்ளார்.
முன்னதாக நேற்று முன் தினம் முழுவதும் அனைத்து செய்தித்தொலைக்காட்சிகளிலும் பாஜக பிரமுகரின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசியதாக செய்தி பரவிய நிலையில், இன்று பாஜக பிரமுகரே தனது காருக்கு தீ வைத்ததாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக்கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, சதீஷ்குமார் தனது காருக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சதீஷ்குமாரின் மனைவி தனக்கு நகை வாங்கித் தரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு, தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால், சதீஷின் மனைவி, காரை விற்று நகை வாங்கித்தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால், கடுப்பான பாஜக பிரமுகர், வீட்டின் வெளியில் நின்றிருந்த காரை தீ வைத்து எரித்துள்ளார்.
தனது காரை தானே எரித்தது குறித்து சதீஷ் வாக்குமூலம் அளித்த நிலையில் இச்சம்பவம் குறித்து அவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் நேற்று இரவு 9 மணியளவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லாரி மோதிய விபத்து... பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார் - இருவர் உயிரிழப்பு