சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், "அகில இந்திய இந்து மகா சபா, இந்து தேசம் என்ற பத்திரிகையை ஶ்ரீகண்டன் என்பவர் நடத்திவருகிறார்.
இந்த மகா சபா அமைப்பில் உறுப்பினராக உள்ள நிரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் ஶ்ரீகண்டன் மீது கொடுத்த பாலியல் புகாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி அவருக்கு முன்பிணை வழங்கியது.
ஆகவே இவ்வழக்கு தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தனக்கு குறுஞ்செய்தி அனுப்பி கொலைமிரட்டல் விடுக்கும்வகையில் பேசுகிறார். இதன் பின்னணியில், நிரஞ்சனியும் இணைந்து செயல்படுவதாகத் தெரிகிறது.
ஒரு வழக்குரைஞராக, ஶ்ரீகண்டன் வழக்கில் முன்னிலையாவதால் எனக்கு மிரட்டல் விடுக்கும்வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, காவல் துறை ஆணையருக்குப் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் தனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சம்பந்தப்பட்ட பாலியல் புகார் தெரிவித்த நிரஞ்சனா, ஜெயக்குமார் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: செக் மோசடி வழக்கு - உயர் நீதிமன்றம் விளக்கம்!