சென்னை: 'தற்போதுள்ள டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும், அது கடினம். ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும்' என 11 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் (Grand Slam winner) வென்ற பிஜார்ன் போர்க் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் நடக்க உள்ள ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டிகள் (Open ATP Challenger 100 Men Championship) நாளை (பிப்.13) தொடங்க உள்ளது. இதன் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவரும் , முன்னாள் இந்திய டென்னிஸ் வீரருமான விஜய் அமிர்தராஜ் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் 11 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பிஜார்ன் போர்க் (Bjorn Borg) கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பிஜார்ன் போர்க், "சென்னையில் நல்ல மனிதர்கள் உள்ளனர். இங்கு நல்ல உணவு கிடைக்கிறது. இங்கு மீண்டும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. என் மனைவிக்கு இந்தியா வர வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தது. தற்போது இங்கு நான் வந்ததில் அவருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. திறமையான வீரராக வரவேண்டும் என்றால் களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் கடுமையாக உழைக்க வேண்டும். டென்னிஸ் மைதானத்தில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அதே நேரத்தில் எப்போதும் ஊக்கத்துடன் இருக்க வேண்டும்.
தற்போதுள்ள டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது கடினம் என்றாலும், அதை கற்றுக்கொள்ள வேண்டும். மைதானத்துக்குள் எதைச்செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்பதை வீரர்களே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு எடுக்கும் முடிவுகள் தவறோ, சரியோ முடிவு எடுக்கும் திறனை முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், ''டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். தன் மகன் இங்கே விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தன் மகனும் கடுமையாக உழைக்கக்கூடியவர். தற்போது தான் 19 வயதாகிறது. அவர் இன்னும் பல தூரங்களை கடக்க வேண்டி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய விஜய் அமிர்தராஜ், "4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் சேலஞ்சர் தொடர் சென்னைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக நாடுகளில் நடத்தப்படக் கூடிய சேலஞ்சர் தொடர்களில் அதிக பரிசுத்தொகை கொண்ட தொடர் இது. இந்த சேலஞ்சர் தொடர், இந்திய டென்னிஸ் வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். தற்போது டென்னிஸ்ஸின் தரம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
இது சேலஞ்சர் தொடராக இருந்தாலும், ஓபன் டென்னிஸ் தொடர் அளவிற்கு திறமை வாய்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளனர். இந்தத் தொடரை நடத்த உதவியாக இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு எப்பொழுதும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் மாநில அளவிலான போட்டிகளும், கிராமத்து விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட அளவிலும் டென்னிஸ் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கப்போகிறது. ஏடிபி 250 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அது நடக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 2ஆவது இடத்தை பிடித்த இந்தியா