சென்னை: பிரபல பிரியாணி கடையில் கெட்டுப் போன கிரில் சிக்கன் விற்பனை செய்ததால், சாப்பிட்டவர்களுக்கு குமட்டல், வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் மேடவாக்கம் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் இருந்து 3 சிக்கன் ரைஸ், ஆஃப் கிரில் சிக்கன் போன்றவற்றை 800 ரூபாய் கொடுத்து பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். தனது இரு மகன்களுக்கும் சிக்கன் ரைஸை சாப்பிட கொடுத்து விட்டு, பின்னர் கிரில் சிக்கனை கொடுத்துள்ளார்.
அவரின் மூத்த மகனான தேவபிரசாத் (வயது 16) கிரில் சிக்கனை சாப்பிட்டும் போது சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசி, வாந்தி, குமட்டல் வர ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் அவரின் இளைய மகன் தமிழ்மாறன் (வயது 12) ஒரு துண்டு சிக்கனை சாப்பிட்டுள்ளார். சிக்கனில் இருந்து துர்நாற்றம் வரவே அவரும் கீழே துப்பி விட்டார்.
இதனைத் தொடர்ந்து முனுசாமி, பிரபல பிரியாணி கடைக்கு சென்று கெட்டுபோன கிரில் சிக்கனை விற்பனைச் செய்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது கடையில், கூடுதல் பணம் தருவதாக கூறி, இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என சமாதானம் செய்துள்ளனர். அதன் பின்னர் கெட்டுப் போன சிக்கனை எடுத்து வந்து அவர்களே குப்பையில் கொட்டியுள்ளனர்.
இந்த தகவலறிந்து வந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு பிரச்சனை செய்துள்ளனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர். பிரபல பிரியாணி கடையில் கெட்டுப் போன கிரில் சிக்கன் விற்பனை செய்யப்படுவது குறித்து முனுசாமி பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரியாணி கடையின் மேலாளரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், பிரபல பிரியாணி கடை மீது உணவு பாதுகாப்பு துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன உணவு பொருளை காசுக்காக விற்பனை செய்து லாபம் பார்க்கும் இது போன்ற கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை.. ஹெல்மேட் அணியாததால் இளைஞர் பலி உள்ளிட்ட சென்னை க்ரைம் செய்திகள்!