சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடத்தப்படுவது போல போலியான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுபோன்ற வீடியோ வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களது ஊர்களுக்கு செல்ல ரயில்வே நிலையங்களில் குவிந்து வந்தனர். இதனால் ரயில்வே நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும், அவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊர்களுக்கு செல்வதாகவும், தமிழ்நாடு தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு வருகை தந்தது. அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலோக்குமார் மற்றும் சந்தோஷ் குமார் எஸ்.பி உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி மற்றும் ஹோட்டல், கட்டுமானம், தொழில்துறை, வணிகம், பீகார் மக்கள் அசோசியேஷன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டது.
இதையடுத்து பீகார் குழுவினர் 2 நாட்களாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று (மார்ச் 7) சென்னையிலும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 100 வட மாநில தொழிலாளர்களை சந்தித்த பீகார் குழுவினர் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் செய்யும் தொழில்கள் குறித்தும் பாதுகாப்பு சூழல் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை செயலர் பாலமுருகன், வட மாநில தொழிலாளர்கள் குறித்து போலியான வீடியோ பரவிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது. இந்த வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் பீகார் - தமிழ்நாடு அரசு இணைந்து சிறப்பாக செயலாற்றினோம். பீகார் தொழிலாளர்களிடம் ஆரம்பத்தில் பதற்றம் இருந்த நிலையில், தற்போது அவர்களிடையே பயம் குறைந்துள்ளது. இதை அவர்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தின்போது தெரியவந்தது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு நிறுவனங்களின் வேலையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்