நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது வழக்கம்போல் சர்ச்சையானது. ஏற்கனவே, மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரிகளில் தனியார் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற விதி உள்ள நிலையில் பிகில் படத்திற்கு தனியார் கல்லூரி அனுமதி வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு எதனடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது? பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? உள்ளிட்ட விளக்கங்களைக் கேட்டு விழா நடைபெற்ற சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு தமிழ்நாடு உயர் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து, உயர் கல்வித் துறைச் செயலர் மங்கத் ராம் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசியல் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஏற்கனவே விதிமுறைகள் உள்ளது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு அது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அங்கீகாரம் பெறுவதிலும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது” என்று கூறினார்.