திரைத்துறையில் பல வெற்றி பாடல்களை கொடுத்து இசைஞானியாக இருப்பவர் இளையராஜா. ஒரு காலகட்டத்தில் இவரது பாடலுக்கென்றே படங்கள் ஓடியது என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்படி புகழின் உச்சத்திலிருந்த இளையராஜா தனக்கு என்று தனியாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்துக் கொள்ளவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோவின் நிறுவனரான எல்.வி.பிரசாத் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் தனது ஸ்டுடியோவில் உள்ள ஒரு கட்டடத்தை இளையராஜாவிடம் வாடகைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக கொடுத்தார். அந்த ஸ்டுடியோவையே இளையராஜா தனது ரெக்கார்டிங் பணிகளுக்காக பயன்படுத்திவந்தார்.
இளையராஜா புகழின் உச்சியில் இருந்தபோது இசையமைத்த அனைத்து பாடல்களுமே பிரசாத் டீலக்ஸ் ரெக்கார்டிங் தியேட்டரில்தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இசை பணி செய்துவரும் இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டுடியோ பக்தி கலந்த உணர்வுபூர்வமான இடமாகவே இருந்தது.
இதனிடையே, பிரசாத் ஸ்டுடியோவில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் இடத்தை காலி செய்யுமாறும் இளையராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டரை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோஸ் உத்தரவிட்டதை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பாக்கியராஜ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் பிரசாத் ஸ்டுடியோஸ் முன்பு திரண்டனர்.
முதலில் அவர்களை உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரசாத் ஸ்டுடியோஸ் முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
இறுதியில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட அனைவரும் உள்ளே சென்று பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகத்துடன் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், 45 வருடத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்து இளையராஜா பிரசாத் ஸ்டுடியோசில் தன் பணியை செய்துள்ளார். கால சூழ்நிலையில் அவரை திடீரென்று காலி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அது வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை அறிக்கையாக பிரசாத் ஸ்டுடியோஸ் பொறுப்பு நிர்வாகிகளிடம் வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நாங்களும் இளையராஜவுக்கு வேறு இடம் அமைக்க முயற்சி செய்வோம். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் பிரசாத் ஸ்டுடியோஸ் இயக்குநர் உடன் பேச்சுவார்த்தை நடைபெறும். இளையராஜவுக்கும், பிரசாத் ஸ்டுடியோவுக்கும் பாதகம் இருக்கக் கூடாது. இருவருக்கும் சமாதான முறையில் இந்த பிரச்னை முடிய வேண்டும் என்று தெரிவித்தார்.