சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பினை முடித்தப்பின்னர் உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகல்வித்துறையில் 2020-21ஆம் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். மேலும் 10ஆம் வகுப்பில் படித்த மாணவர்களில் சுமார் 2 லட்சம் பேர் படிப்பை தொடராமல் இடைநிறுத்தம் செய்துள்ளனர். அதேபோல் 2021ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை அரசுப் பள்ளிகளில் இருந்து 1 லட்சத்து 44 ஆயிரத்து 486 மாணவர்களும், 1 லட்சத்து 83 ஆயிரத்து 137 மாணவிகளும் என 3 லட்சத்து 27 ஆயிரத்து 623 பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
இடைநிறுத்தம் குறையும்: இவர்களில் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 85, 630 பேரும், பொறியியல் படிப்பில் 5136 பேரும், பாலிடெக்னிக் படிப்பில் 1948 பேரும் என 92 ஆயிரத்து 714 பேர் சேர்ந்துள்ளனர். அரசு உதவிப்பெறும் பள்ளியில் படித்த மாணவிகள் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 48,691 பேரும், பொறியியல் படிப்பில் 12306 பேரும், பாலிடெக்னிக் படிப்பில் 726 பேரும் என 61 ஆயிரத்து 723 பேர் சேர்ந்துள்ளனர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், கல்வியை இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, அவர்கள் மேலும் கல்வியை தொடர உதவும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டம் மாணவர்களுக்கு பயனளிக்குமா எனபது குறித்து, பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நமது செய்தியாளரிடம் ஒரு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
பட்டப்படிப்புக்கு உதவும்: அதில் அவர், “பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் மூவலூர் ராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தை அறிவித்துள்ளனர். திருமண நிதியுதவித் திட்டத்தினால் மாணவிகள் கல்வி பயிலும் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், 12ஆம் வகுப்பு முடித்தப்பின்னர் மாணவிகள் 18 வயது முடிந்தப்பின்னர் திருமணத்தை முடித்து விடுகின்றனர்.
கல்விக்காக திட்டம் அறிவிக்கப்பட்டாலும், அதனையும் திருமணத்திற்கு பயன்படுத்தி விடுகின்றனர். எனவே அந்தத் திட்டத்தை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படிக்கும் போது மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளனர். இதனால் குடும்ப சூழல் காரணமாக நிறுத்தலாம் என நினைக்கும் மாணவிகளும் தொடர்ந்து படிக்க முடியும். பட்டப்படிப்பினை படிக்கும் போது பெறும் 36 ஆயிரம் ரூபாய் மேல்படிப்பு படிப்பற்கும், வேலை வாய்ப்பிற்கான பயிற்சியை மேற்கொள்ளவும் பயனளிக்கும்” எனக்கூறினார்.
வரவேற்கத்தக்க திட்டம்: இவரைத்தொடர்ந்து கல்வியாளர் நெடுஞ்செழியன் நமது செய்தியாளரிடம் கூறுகையில், “தமிழ்நாடு அரசு, அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தினை மேலும் மேம்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக்குழந்தைகள் என்பதாலும், அப்பாக்கள் குடிப்பழக்கம் இருப்பதாலும் குழந்தைகளை மிரட்டி ஆயிரம் ரூபாயை பிடிங்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதுபோன்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
அரசுக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரும் போது, அவர்கள் தனியார் கல்லூரிகளை அவர்களை தேடிச்செல்லும் வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும். எனவே அவர்களை சிறந்த அரசுக்கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அவர்களின் திறமையை வளர்க்கும் வகையில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மேலும் இது போன்று நிதியை செலவழிப்பதைவிட, உயர்கல்வியில் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள், அரசுக் கல்லூரியில் படிப்பதற்கு நிறைய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான செலவுகளை செய்து, அவர்கள் எளிதில் அணுகும் வகையில் செய்துக் கொடுத்தால், குழந்தைகளும், குடும்பங்களும் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.
தரமான கல்வி: தனிமனிதனின் கல்வி நன்றாக இருந்தால், அந்தக்குடும்பம், பொருளாதாரம் போன்றவையும் உயரும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். கல்விக் கொடுக்கும் போது தரமான கல்வியையும் அளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவே மத்திய அரசினால் ஆராய்ச்சி, கல்விப் போன்றவற்றிக்கும் அளிக்கும் தொகையையும் பயன்படுத்தி கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியைய நிதித்துறை அமைச்சர் மேற்கொள்வார் என நம்புகிறோம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை சரியாக திட்டமிட்டுள்ளனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்டக்கல்விக்கு அளிப்பது போல் தரமான கல்வியை அளிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும். தனியார் கல்லூரிகள் இந்தத் திட்டத்தினால் மாணவர்களை கண்டறிந்து சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.
பயனுள்ள திட்டம்: ஏற்கனவே தனியார் பொறியியல் கல்லூரிகள் எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக மாணவர்களை சேர்க்கின்றனர். அதேபோன்று இந்தத் திட்டத்திலும் செய்வார்கள். அதுபோன்றவை நடக்காமல் தடுக்க வேண்டும். மேலும் தனியார் கல்லூரிகள் நன்றாக இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால் அங்கும் சில பிரச்சனைகள் உள்ளது. அதே நேரத்தில் அரசு கல்லூரிகள் சிறப்பாக இருக்கிறது என கூற முடியாது.
எனவே சிறப்பாக கற்பித்து வரும் அரசுக் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வியில் சேர்வதற்கு விகிதாரச்சாரத்தை அதிரிக்கும் வகையில் மாணவிகளுக்கு மட்டும் உயர்த்தி வழங்கலாம். இது அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் வகையில் திட்டத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து திட்டமிடலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பஞ்சாயத்து செயலாளர்; கடந்து வந்த வலி நிறைந்த பாதை!