சென்னை: பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளது குறித்து வெளியாகியுள்ள புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர்கள் சேர்க்கையின்போது தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே, முன்னணிக் கல்வி நிறுவனங்களில் அதிகமாக சேர்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள், 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே சேர்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 1 விழுக்காடு இடம் கூட பெற முடியாத சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.
2020-21ஆம் கல்வியாண்டு சேர்க்கை விபரம்:
வ.எண் | பல்கலை/ கல்லூரி | மொத்த இடங்கள் | அரசுப்பள்ளி மாணவர்கள் | முதல்தலைமுறை பட்டதாரிகள் |
1 | அண்ணா பல்கலைக்கழகம் | 2,420 | 20 | 8 |
2 | அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகள் | 6536 | 388 | 164 |
3 | அரசு பொறியியல் கல்லூரிகள் | 3900 | 246 | 103 |
4 | அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் | 2960 | 13 | |
5 | சுயநிதி பொறியியல் கல்லூரிகள் | 197116 | 12465 | 6584 |
பொறியியல் படிப்பில் உள்ள 2 லட்சத்து 12 ஆயிரத்து 932 இடங்களில் 13 ஆயிரத்து 82 அரசுப்பள்ளி மாணவர்களே சேர்ந்துள்ளனர்.
2019 -20ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை
வ.எண் | பல்கலை/ கல்லூரி | மொத்த இடங்கள் | அரசுப்பள்ளி மாணவர்கள் | முதல் தலைமுறை பட்டதாரிகள் |
1 | அண்ணா பல்கலைக்கழகம் | 2,420 | 36 | 3 |
2 | அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகள் | 6,550 | 377 | 139 |
3 | அரசு பொறியியல் கல்லூரிகள் | 3,900 | 305 | 120 |
4 | அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் | 2,900 | 26 | |
5 | சுயநிதி பொறியியல் கல்லூரிகள் | 2,10,615 | 11,915 | 5,173 |
அதேபோல் 2018 -19ஆம் ஆண்டில், 12,954 அரசுப்பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அதில், அண்ணா பல்கலைக் கழகத்தில் 74 மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 544 பேரும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 90 மாணவர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 323 மாணவர்களும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 32 மாணவர்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 11,891 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2017 - 18ஆம் ஆண்டில், 10,728 ஆக இருந்துள்ளது. இதில், அண்ணா பல்கலைக் கழகத்தில் 59 மாணவர்களும், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 783 பேரும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 329 மாணவர்களும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 41 மாணவர்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 9,516 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
இந்த புள்ளி விவரங்கள், பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகவும் குறைந்த அளவில் சேர்ந்துள்ள அதிர்ச்சித் தகவலைக் காட்டுகின்றது. அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் சமூகப் பொருளாதார நிலை மற்றும் விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் பொறியியல் படிப்பில் சேர்க்கை குறைவாகவே உள்ளன எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குக'