அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு கலந்தாய்வு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில், 71 ஆயிரத்து 195 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரம் தெரிவித்துள்ளது. கலந்தாய்வின் முடிவில் 91 ஆயிரத்து 805 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் இடங்களை தேர்வு செய்த மாணவர்களில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையும் என தெரிகிறது.
சிறப்பு பிரிவினருக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெற்ற கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 98 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 122 மாணவர்களும், விளையாட்டு பிரிவில் 277 மாணவர்கள் என 497 பேர் இடங்களை தேர்வு செய்தனர். தொழிற்கல்வி மாணவர்களுக்கு 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்விற்கு 1533 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 946 மாணவர்கள் மட்டும் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொது கலந்தாய்வில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்களில் 76 ஆயிரத்து 364 இடங்கள் மட்டுமே நிரம்பின. 90 ஆயிரத்து 737 இடங்கள் காலியாக இருந்தன.
இதையும் படிங்க: 40 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: கல்வியாளரின் கருத்து என்ன?