சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 20) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், "நிதி நிறுவன மோசடியில் மக்கள் தொடர்ந்து ஏமாறி வருகின்றனர். இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஆருத்ரா நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, ரூ.2,438 கோடி முதலீடு மற்றும் வட்டியை திருப்பித் தராதது குறித்து புகார் வந்தது. நிறுவனத்தின் இயக்குநர், ஏஜென்ட் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 93 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டது குறித்தும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதில் 16 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ததுடன் அவர்களுடைய சொத்துகள், வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் பொதுமக்களின் பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. IFS, ஹிஜாவு நிதி நிறுவனம், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கப்பட்டது.
இது போன்ற நிதி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் யாராக இருந்தாலும் திமுக அரசு வந்தபின் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக IFS நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: TNPSC: டிஜிபி ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா சைலேந்திர பாபு?