பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான இணையதளம் பதிவு விண்ணப்பம் மே 2ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்தனர். இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 442 மாணவர்கள் சேர்க்கைக்கான பதிவுகளை செய்துள்ளனர்.
இவர்களுக்கான சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் ஜூன் 3ஆம் தேதி மாலை 3 மணிக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை 43 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று 17ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி துவங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.