தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்க்கவும், அதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடந்து, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது குறித்து தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், 463 வணிக வளாகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 64 நிறுவனங்களுக்கு ரூ. 54,200 அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி இதுவரை சுமார் 304 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 79 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.