கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும், சேவைகளும் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வங்கி என்பது பொது மக்களுக்கு அத்தியாவசியத் தேவை என்பதால் அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், வங்கிகளில் 33% பணியாளர்களை கொண்டே பணியை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை ஏற்று, சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 26 முதல் 29ஆம் தேதிவரையும், சேலம், திருப்பூர் ஆகிய மாநகரங்களில் உள்ள வங்கிகள் வரும் 26 முதல் 28ஆம் தேதி வரையும் 33%பணியாளர்களை கொண்டு இயங்க மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு (State Level Banker's Committee) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக கரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் சுழற்சி முறையில் 50% பணியாளர்களை பணியில் அமர்த்தி செயல்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளியே சுற்றினால் முழு ஊரடங்கு - புதுச்சேரி முதலமைச்சர்