நாட்டில் உள்ள 10 வங்கிகள் நான்காக இணைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு AIBOA, INBOC, NOBO உள்ளிட்ட 4 வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், AIBOC, AIBOA உள்ளிட்ட நான்கு வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில், "வங்கி இணைப்பு நடவடிக்கையால் கிராமப்புற மக்களின் வங்கி சேவை பாதிக்கப்படும். பெரிய வங்கிகளால் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே பயன் ஏற்படும். சாதாரண மக்களுக்கு இவை பலன் தராது. இதனால் ஏராளமானவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது" எனக் கூறினர்.
மேலும் வங்கி இணைப்பு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரைந்துமுடிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் நான்கு லட்சம் பேர் கலந்துகொள்வர் என்றும், தமிழ்நாட்டில் 40 ஆயிரம் வங்கி அலுவலர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தனர்.
நாடு தழுவிய போராட்டத்திற்கு பின்னும் மத்திய அரசு தங்களின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றால் நவம்பர் மாதம் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றும் வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!