சென்னை:சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் என்ற தொண்டு அமைப்பு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா, கல்யாணமாயி உடன் இணைந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வருகிறது. 7 வது ஆண்டாக சென்னை விமானநிலையத்தில் பிங்க்டோபர் 2022 என்ற தலைப்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதற்கென சென்னை விமான நிலையம் முழுவதும் பிங்க் நிற விழிப்புணர்வு பாதாகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இறுதி நாளான நேற்று(அக்-31) சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வருகைப் பகுதியில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சிறப்பு விருந்தினராக முன்னாள் ஓய்வு பெற்ற காவல் ஆணையாளர் ரவி ஐ.பி.எஸ்,சென்னை விமானநிலைய இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய ஓய்வு பெற்ற டி,ஜி,பி ரவி பேசுகையில், ‘பரம்பரை நோயாக இருந்தாலும் கால சூழ்நிலை காரணமாக மார்பக புற்றுநோய் வருகின்றது. நடிகை ஏஞ்சலினா ஜூலியின் இரண்டு மார்பகத்தை அகற்றி விட்டார்கள். காரணம் அவரது தாய்க்கு இருந்ததால் வரும் முன் காப்போம் என்பதை உணர்ந்து முன்கூட்டியே எடுத்து விட்டார்கள். ஜீன் மூலமாக இந்நோய் வந்துவிடும் என்பதால் அகற்றி விட்டார்கள்.
இது குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு தேவை. அதனை கண்டறிய விழிப்புணர்வை இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் தியாக செம்மல்கள். மார்பக புற்றுநோய் வந்தவர்கள் எந்த நிலையில் கண்டறிந்தாலும் குணப்படுத்தலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள், உணவே மருந்து என்பதற்கேற்ப கண்ட உணவை சாப்பிடாமல் காய்கறி, நல்ல உணவுகளை சாப்பிடவும், குழந்தைகள் எதிர்காலத்திற்காவது தாய்மார்கள் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலத்தை காக்க வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிங்க:துப்பாக்கியை காட்டி மிரட்டிய நிருபர் கைது