சென்னை: திருவல்லிக்கேணி சி.என்.கே சாலையில் உள்ள குப்பைத் தொட்டி அருகே ஒரு பையில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கடந்த 8ஆம் தேதி கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக திருவல்லிக்கேணி காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த நிலையில் இருந்த குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, குழந்தையை குப்பை தொட்டியில் வீசிச் சென்றது யார்..? என்பது குறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தூக்கிவீசப்பட்ட குழந்தை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா மற்றும் தனுஷ் என்பவருடையது குழந்தை என்பது தெரியவந்தது. குழந்தை இறந்ததால் மருத்துவர்கள் தனுஷிடம் வழங்கி இறுதி சடங்கு செய்யுமாறு கூறியுள்ளனர். தனுஷ் கூலி வேலை செய்வதால் ஏழ்மை காரணமாக குழந்தையை பையில் சுற்றி குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் குழந்தையை பெற்று உறவுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் இறுதி சடங்கு செய்தனர். மனித நேயத்துடன் நடந்துக்கொண்ட காவல்துறையினரை தம்பதி மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: மழலை பள்ளியில் கீழே விழுந்து அழுத சிறுமியை கண்டுகொள்ளாத ஆசிரியை மீது புகார்