சென்னை: மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயில், பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு இன்று (அக்.08) காலை 6.30 மணியளவில் அய்யா திருநாமக் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதிகாலை 6.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருநாமக் கொடியை பக்தர்கள் சுமந்தபடி கருவறையை ஐந்து முறையும், வெளிப்புறத்தை ஒரு முறையும், கொடிமரத்தை ஐந்து முறையும் சுற்றி வந்து சிவ சிவ, அர கர என்ற உகப்படிப்பு நாமத்தை எழுப்பினர்.
அப்போது 60 அடி உயரக் கொடி கம்பத்தில் திருநாமக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருவிழா நாள்களில், அய்யா வைகுண்ட தர்மபதி, அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான, சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு ஆகியவை 15ஆம் தேதி இரவும், திருத்தேர் உற்வசம் பத்தாம் 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கும் நடைபெறும். அன்றிரவு அய்யா பூம்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல் நடைபெறும்.
பின் இரவில் திருநாமக் கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறும். திருவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் கோயில் நிர்வாகம் சார்பில் மூன்று வேலையும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
விழாவில் முன்னாள் எம்.பி ஜெயதுரை, கோயில் நிர்வாகத் தலைவர் துரைபழம், துணைத்தலைவர் சுந்தரேசன், பொருளாளர் ஜெயக்கொடி, செயலாளர் ஐவென்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை' - ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்