சென்னை: உலக மூளைப் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று (நவ. 6) சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், மூளை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மூளைப் புற்று நோயிலிருந்து மீண்டவர்கள் நோய்ப் பாதிப்பின் போது தாங்கள் உணர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மூளை புற்றுநோய் நிபுணர் விஜய் சுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
விரைவில் குணப்படுத்த முடியும்
அப்போது, “நீடித்த தலைவலி மற்றும் தலைவலியுடன் சேர்ந்த வாந்தி, முகம் மற்றும் கை கால்கள் மரத்துப்போவது, கண்பார்வை குறைவு, வலிப்பு வருவது இவையெல்லாம் மூளையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளாகும். விரைவில் கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்த முடியும்.
130 வகையான நோய்கள்
மூளை புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் எதுவுமில்லை. வயது அடிப்படையில் நோய் வருவதில்லை. பிறந்த குழந்தை முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு மூளைப் புற்று நோய் வருகிறது. மூளை புற்றுநோயில் 130 வகையான நோய்கள் உள்ளது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வில் மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிலேயே மூளை புற்றுநோய் பாதிப்பு சென்னையில் தான் அதிக அளவில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்த சோகம்!