வேலூர்: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் ஓய்வு பெற வேண்டும் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, அவருடைய நல்ல எண்ணத்திற்கு நன்றி. பொதுவாக எப்போதும் அவர் என்னை பற்றி பேச மாட்டார். இப்போது பேசியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
தமிழ்நாட்டில் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் என ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்கு, அவர் அடிக்கடி இப்படிப்பட்ட கருத்துகளை எல்லாம் பேசி வருகிறார். ஆளுநருக்கு உரிய மாண்பையும் மரியாதையையும் இழந்து முச்சந்தியில் சண்டை போடுவது போல் ஆட்சியோடு சண்டை போட்டு கொண்டிருக்கிறார். இதனால் எங்களுக்கு நட்டமல்ல. அவருக்கு வேண்டுமானால் லாபம் இருக்கலாம். ஆளுநர் அரசியல்வாதி போல் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆளுநரை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, நாங்கள் ஆளுநரே வேண்டாம் என்கிறோம். இவரை மாற்றி வேறு ஒருவர் வரவேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை என்றார்.
புதிய மணல் குவாரிகள் திறக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எல்லா ஆற்றிலும் தண்ணீர் ஓடுகிறது இப்போதைக்கு மணல் எடுக்க முடியாது என்றார்.