பெண்கள், மாணவிகள் ஆகியோருக்கு துணையாக இருப்பது காவலன் செயலி என்பதை சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அவர்கள் அறியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். காவலன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் காவலன் செயலி தொடர்பான விபரங்கள் அடங்கிய கையில் கட்டக்கூடிய பேண்ட், சட்டையில் வைத்துக்கொள்ளும் பேட்ஜ்களை திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் சீத்தாராமன் தலைமையில் ஏற்பாடு செய்து அவற்றை காவலர்கள் இன்று பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய ஹீலியத்தால் நிரப்பப்பட்ட ராட்சத பலூனை காவல் ஆய்வாளர் சீத்தாராமன் வானில் பறக்கவிட்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
நிகழ்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதுடன், எந்த சூழலிலும் காவல்துறையினர் நமக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக காவலன் செயலி உதவுகிறது என்று காவல் ஆய்வாளர் சீத்தாராமன் தெரிவித்தார்.
இவர் ஏற்கனவே அரசியல் கட்சி ஆர்ப்பாட்ட மேடையில் காவலன் செயலி குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு