சென்னை : ஆவடி மாநகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், கோவில் பதாகை, பட்டாபிராம், மிட்டினமல்லி, முத்தா புதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. மேலும் இங்கு மத்திய ரிசர்வ் காவல் படை, விமானப் படை பயிற்சி மையம், ]ரயில்வே பணிமனை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படைகள், காவலர் பயிற்சி மையம் ஆகியவையும் உள்ளன.
இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது என பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். பாஸ்ட் புட், இறைச்சிக் கடைகளில் உள்ள கழிவுகளை உண்டு அப்பகுதிகளில் வசிக்கும் தெரு நாய்கள், மக்களையும் அச்சுறுத்தி வருவதாகவும், ஒரு தெருவிற்கு பத்து நாய்கள் வீதம் இவை உள்ளதாகவும், நாய்கள் கடித்து உயிர் பலி வரை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனைத் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த நாய்களால் இரவில் வேலை முடித்து வீடு திரும்புவோரும், குழந்தைகளும் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். பலர் தங்களது தூக்கத்தையும் இழந்து தவிப்பதாகக் கூறுகின்றனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்தவும், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்க கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள், ”கடந்த நான்கு ஆண்டுகளாக நாய்களின் தொந்தரவு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கையும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாய் கடிக்கு அரசு மருந்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இல்லாததால், மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே தெரு நாய்களிடமிருந்து மக்களைக் காக்க மாநகராட்சி விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.