சென்னை: "ஆயிரம் வார்த்தைகள் கூற வரும் உணர்வை அல்லது செய்தியை, ஒரு நல்ல புகைப்படம் கூறி விடும்" என்பார்கள். தினம் தினம் வளர்ச்சி அடைந்து வரும் உலகத்தில், புகைப்படமும், கேமராவும், தன் வளர்ச்சியை பிரம்மாண்ட பாதையில் அழைத்து சென்றுக் கொண்டு இருக்கிறது என்றால் மிகையல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால், போட்டா ஸ்டூடியா வரை செல்ல வேண்டும். அந்த போட்டாவை பிரிண்ட் போட்டு பார்ப்பதற்கு குறைந்தது, ஒரு நாளாவது காத்திருக்க வேண்டியது இருந்தது.
அதேபோல், 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஏதாவது ஒரு விஷேச வீட்டில் போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தால், அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அவருக்கு என்று தனி மதிப்பு இருந்தது. ஆனால் தற்போது, உலகத்தின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய, அதற்கு ஏற்ப கேமராவின் வளர்ச்சியும் கற்பனை செய்ய முடியாத அளவை எட்டியுள்ளது.
செல்ஃபி முதல் மேக்ரோ போட்டோகிராபி வரை, தற்போது மக்கள் அவர்கள் வைத்திருக்கும்ம் ஸ்மார்ட்ஃபோனில் புகைப்படம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். கேமரா தன் வடிவத்தை இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாற்றினாலும், அதன் பன்பை அது மாற்றி கொள்வதில்லை. காலத்தை கடந்து நிற்கும் நினைவுகளை நிழற்படங்களாக்கித் தந்த கேமராக்களின் வரலாறும் மிகப் பெரியதே!
போட்டோகிராபி வகைகள்: இதழியல் போட்டோகிராபி, இயற்கை போட்டோகிராபி, போட்ரைட் போட்டோகிராபி, வைல்ட் லைஃப் போட்டோகிராபி, கேண்டிட் போட்டோகிராபி, அஸ்ட்ரோ போட்டோகிராபி, மேக்ரோ போட்டோகிராபி என 10-க்கும் மேற்பட்ட புகைப்பட வகைகள் இருக்கின்றன.
இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு மிகப் பழைமை வாய்ந்தது. ஸ்டில் லைஃப் ஓவியத்தில் (Still life Painting) இருந்து தான் புகைப்படங்கள் தொடங்கியது என்பது மறுக்க முடியாது ஒன்று.
பல்லாயிரம் வருடங்கள் முன், தான் பார்த்ததை வரைந்து வரும் பழக்கம், ஆதிகால மனிதர்களிடையே இருந்தது. அதன் பரிமான வளர்ச்சி, ஓவியங்களாய் மாறியது. ஓவியங்கள் மூலம் கருத்து சார்ந்தும், மதம் சார்ந்தும், தான் பார்க்கும் செய்தியை, பிறரிடம் தெரிவிக்க வரையப்பட்டது. அதில், லியோனார்டோ டாவின்சி முதல் ரவிவர்மா வரை தன் எண்ணங்களை ஓவியம் மூலம் தெரிவித்தனர். காலப்போக்கில், ஓவியங்களில் இருந்து, கேமரா மூலம் மனிதன் தான் பார்க்கும் விஷயத்தை பதிய செய்ய ஆரம்பித்தான்.
முதல் புகைப்படம்: அப்ஸ்குரா என்ற பெயரில் புகைப்படம் எடுக்க கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 1825ஆம் வருடம் பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த பிம்பம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது.
இதன்பிறகு 1839ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அப்போது அவர் பாரீஸில் உள்ள போல்வர்டு கோயிலை புகைப்படமாக எடுத்தார். பின்னாளில் அதற்கு "View from the Window at Le Gras," என்று பெயர் வைக்கபட்டது. அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார். போட்டோகிராபி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் ‘ஒளியின் எழுத்து’ என்று பொருள்.
உலக புகைப்பட தினம்: 19ஆம் நூற்றாண்டில் ‘லூயிசு டாகுவேரே’ என்பவர்தான் 'டாகுரியோடைப்' என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். 1839ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு, ஆகஸ்ட் 19ஆம் தேதி டாகுரியோடைப் செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது. இதன் நினைவாக தான் ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகம் முழுவதும் புகைப்பட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து புதிய முறையிலான கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1841ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பாக்ஸ் என்பவர் கலோடைப் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதில் நெகட்டிவ்களாக பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் செல்லுலாய்ட் பிலிம்களை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் தயாரித்தனர்.
இந்த முறையில் செல்லுலாஸ் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. 1888ஆம் ஆண்டு ‘ஜார்ஜ் ஈஸ்ட்மேன்’ முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து 1900ஆம் ஆண்டு பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மி.மீ. ஸ்டில் கேமராக்களை 1913ஆம் ஆண்டு ஆஸ்கர் பர்னாக் வடிவமைத்தார்.
போரை நிறுத்திய புகைப்படங்கள்: வியட்னாம் போரில் வீசப்பட்ட குண்டு வெடித்து, உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுக்க பயத்துடன் ஓடிவரும் நிர்வாணச் சிறுமியின் புகைப்படம், 19 ஆண்டுகளாக நடந்து வந்த ஒரு பெரும் போரையே நிறுத்தியது என்று கூறலாம். அதன் பிறகு, 1945 இல் ஜப்பானின் மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியபோது, அது ஆறு வருட உலகப்போரை கிட்டத்தட்ட ஒரு நொடியில் நிறுத்தியது. இந்த குண்டுவெடிப்பின் படம், குண்டு வீசிய விமான குழுவினரால் எடுக்கப்பட்டது.
வரலாற்றில் நின்ற புகைப்படங்கள்: மேலும், மெக்சிகோ நகரில் 1968 நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் ஆப்பிரிக்க-அமெரிக்க விளையாட்டு வீரர்கள் டோமி ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் வெற்றிபெற்று தங்கள் கைகளை உயர்த்தி போஸ் கொடுத்தனர். விளையாட்டு வரலாற்றில் எடுக்கப்பட்ட மிக வெளிப்படையான அரசியல் ரீதியான புகைப்படமாக இன்றளவும் இது இருந்து வருகிறது.
இரட்டை கோபுர தாக்குதலின் போது அதில் இருந்து மனிதர்கள் விழும் புகைப்படம், விமான விபத்து, சைகோன் தண்டனை என வரலாற்றுச் சுவடுகளாய் மாறிய பல புகைப்படங்கள் உள்ளன. இந்தியாவில், டிசம்பர் 2ஆம் தேதி போபால் விஷ வாயுவால், பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். அதில் இறந்த ஒரு குழந்தையின் முகம் மட்டும் மண்ணில் இருந்து வெளியில் தெரிவது போல் இருந்த, அந்த புகைப்படம், இந்தியாவில் அப்போது அதிகமாக பேசப்பட்ட புகைப்படமானது.
தற்போது, நாங்குநேரில் நடந்த வன்முறையில், அந்த சிறுவனின் வீட்டு வாசல் படியில் ரத்தக்கறை படிந்திருக்கும் புகைப்படம் நிகழ்காலத்தில் நிழவும் சாதிய ரீதியிலான கோரத்தை எடுத்துக் காட்டும் புகைப்படமாக சமூக வலைதளங்களில் அதிகம் பதிவிடப்படுகிறது.
புகைப்படம் என்பது வெறும் காகிதத்தில் பதிந்திருக்கும் நிழற் சுவடு மட்டும் அல்ல, அது மனிதன் மறக்க விரும்பா நினைவுகளையும், மறக்க முடியா நிகழ்வுகளையும் காலம் கடந்தும் கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. பேரின்பமோ பேரிழப்போ எதுவாயினும், நடந்து முடிந்தவைகளை, நினைவில் நீங்கமால் நீடிக்க செய்யும் புகைப்படத்திற்கான தினம் இன்று.
இதையும் படிங்க: 46வது பிறந்த நாள் காணும் வைகை எக்ஸ்பிரஸ் - கேக் வெட்டி கொண்டாடிய ரயில் ஆர்வலர்கள்!