சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் ஆசிரியரான எபிதாஸ் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக வழக்கறிஞர் ஸ்ரீதர் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் குழந்தைகள் நல ஆணையம், இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளரான தமிழ் கதிர் என்பவர் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், " பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் எபிதாஸ் எனக்கு உறவினர். ஏற்கெனவே எபிதாஸ் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தி முடிந்துவிட்டது.
மீண்டும் எபிதாஸ் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்து பரப்பி வருவது நல்லது கிடையாது. பள்ளியின் தாளாளருக்கும், எபிதாஸுக்கும் நடக்கக்கூடிய பிரச்னையில் பள்ளி முதல்வரின் தூண்டுதலின் பேரில் பணம் வாங்கிவிட்டு பொய்யான வழக்குத் தொடர்ந்திருப்பது சரியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக வழக்கை வாபஸ் வாங்குமாறு தமிழ் கதிர் கூறியுள்ளார். அதற்கு முடியாது என வழக்கறிஞர் தெரிவித்ததால், தகாத வார்த்தையைக்கூறி தமிழ் கதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர் தமிழ் கதிர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர் ஸ்ரீதர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணிகண்டன் பாலியல் வழக்கு: உதவியாளர், பாதுகாவலரிடம் விசாரணை நடத்தும் போலீஸ்!