கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாயிரத்து 331 உதவி விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பணியிடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு தரப்பினரிடமிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, விண்ணப்பங்களை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்திட கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுது அளிக்கும் அனைத்து தகவல்களும் இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாளுக்குப்பிறகு அதில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படாது. தேர்வர்களின் ஆசிரியர் பயிற்சி பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்களும், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்களும், நேர்காணலின்போது 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான பணி அனுபவம் சான்றிதழ்களைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறி வந்தனர். இதனால், கல்லூரி கல்வி இயக்குனரகம் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சான்றிதழ்களை பெறுவதற்கான வழிமுறைகள், வசதிகளும்" செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.