சென்னை எழும்பூர் எஸ்பிஐ ஆர்.ஏ.சி.பி.சி. (RACPC) கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றிவருபவர் ஜிடகாம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்களது வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்த மாதவன், வங்கியில் ராமகிருஷ்ணன் என்பவரின் கணக்கிலிருந்து 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்துவிட்டதாகக் கூறி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கரூர் மாவட்டம் மண்மங்கலம், அருமைகாரன் புதூர் பகுதியில் மாதவன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கரூர் மாவட்டம் விரைந்துசென்று மாதவனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாதவன் 2013-14ஆம் ஆண்டுமுதல் பங்குச்சந்தையில் முதலீடு செய்து நிறைய கடன் ஏற்பட்டு இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக விட்டதைப் பிடிக்கும் நோக்கில் எழும்பூரில் அமைந்துள்ள எஸ்பிஐ ஆர்.ஏ.சி.பி.சி. கிளை வங்கியில் Reverse Mortgage Loan வைத்திருந்த ராமகிருஷ்ணன் என்பவரின் கணக்கில் மார்ச் 2020இல் தன்னுடைய செல்போன் எண், அவரது மனைவியின் வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை இணையதள வங்கி சேவை மூலமாகப் பயன்படுத்தி 82 லட்சத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் மாதவனை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்தப் பணம் மோசடியில் வேறு யாருக்காவது சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் மாதவனிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மோசடிக்கும்பலின் வங்கிக் கணக்குகளை முடக்க முடிவு!