சென்னை: கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வழக்குப்பதிவு செய்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் 2002 மார்ச் 14ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறு ஆய்வு மனுவாக விசாரணைக்கு எடுத்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரித்தார். இந்நிலையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்டவிரோதமானது என்பதாலும், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி என்பதாலும் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, மற்றும் அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீநிதன்ற உத்தரவின் படி பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணங்களின் அடிப்படையில் தான் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறை சட்டம் 378ன் படி மேல்முறையீடு செய்யவில்லை. உயர்நீதிமன்றம் வழக்கை மறு விசாரணை செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், நீதிமன்ற நிர்வாக குழு அனுமதி இல்லாமல் மீண்டும் வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிப்பதா? அல்லது வேறு அமர்வுக்கு மாற்றுவதா? என்பது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து வழக்கை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்