சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக உறுப்பினர் ஆடலரசன், "கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முறிந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. புயல் வந்த போது அகற்றும் பணிகள் நடைபெற்றன. பின்னர் பணிகளில் தொய்வு ஏற்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் சென்று விட்டனர். விவசாயிகள் விரைவில் உழவு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, "கஜா புயலில் மொத்தம் 32 ஆயிரம் மின்கம்பங்கள் விழுந்தன. இதில் 1,500 மின் கம்பங்கள் தான் அகற்றப்படாமல் உள்ளன. அதுவும் ஒரு மாத காலத்தில் அகற்றப்பட்டு விவசாயிகள் பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயலால் 5 மாவட்டங்களில் மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரம் மின் கம்பங்கள் விழுந்தன" என்று தெரிவித்தார்.