சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்விநேரத்தின்போது பேரவைத்தலைவர் அப்பாவு கிளை நியாயவிலை கடைகளுக்கு 6 லட்சம் மதிப்பீட்டில் 200 சதுர அடி பரப்பளவில் டைப் டிசைன் அமைத்து கழிவறை உடன் கட்ட வேண்டும் என பொதுப்பணித்துறையிடம் திட்டம் ஒன்று பெறப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார். மேலும் 15 கிளை நியாயவிலைக் கடைகள் கட்ட 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இதற்குப்பதில் அளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 'இவை சரியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
பின்னர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசும்போது,' ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சித்துறையிடம் மதிப்பீடு கேட்டிருந்தோம். அதில் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு ஊராட்சித்துறை ரூ.16 லட்சமும், பொதுப்பணித்துறை ரூ.24 லட்சமும் கட்டத்தேவைப்படும் என்று தெரிவித்தது. ஏன் இந்த வேறுபாடு. முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலேசித்து இந்த வேறுபாட்டை விளக்க வேண்டும்' என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பெரியசாமி, 'நீங்கள் சொல்வதுபோல் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சித்துறையில் கட்டும் கட்டடங்களின் விலையில் வேறுபாடு உள்ளது உண்மைதான். நியாயவிலைக் கடைகள் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் மூலம் டெண்டர் விட்டு கட்டப்படுகிறது. பெரும்பாலும் பொதுப்பணித்துறைக்கு கொடுக்கப்படுவதில்லை.
பள்ளி கட்டடங்கள் மட்டுமே பொதுப்பணித்துறை கட்டி வருகிறது. மேலும் நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது இது குறித்து முடிவு எடுத்திருக்கலாம்? தற்போது இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் முடிவு எடுப்பார்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:எடப்பாடியை கலாய்த்த உதயநிதி - ஓபிஎஸ் கூறிய அதிரடி பதில்!