அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அப்துல் அலி (38), வயிறு தொடர்புடைய நோயினால் அவதிப்பட்டு வந்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாா்.
நேற்று (டிச.22) மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சாா்ஜ் ஆனாா். இதனையடுத்து இன்று காலை 8.30 மணி விமானத்தில் ஹவுகாத்தி செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தாா். விமானநிலையத்தின் உள்பகுதியில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தாா்.
அங்கிருந்த சகபயணிகள் விமானநிலைய அலுவலர்களுக்கு தெரிவித்தனா். அங்கு விரைந்த விமானநிலைய மருத்துவ குழுவினா் அவரை பரிசோதித்துவிட்டு, திடீா் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த சென்னை விமானநிலைய காவல் துறையினர் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.
இதையும் படிங்க: ‘சூபியும் சுஜாதையும்’ இயக்குநர் ஷாநவாஸ் உயிரிழப்பு!