ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 3 ஆயிரத்து 929 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 7 ஆயிரத்து 621 கோடி ரூபாயாக இருந்தது. இது 42 சதவிகித சரிவாகும். நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருவாய் கடந்த ஆண்டு 528 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 39 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் நிகர லாபம் 92 சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளது. அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் வரி, வட்டி மற்றும் கழிவுகளுக்குப் முந்தைய வருவாயின் அளவு (EBITDA) 5.2 சதவிகிதமாக உள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான அரையாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 9 ஆயிரத்து 613 கோடி ரூபாயாக உள்ளது. கடந்தண்டில் இது 13 ஆயிரத்து 882 கோடி ரூபாயாக இருந்தது. அரையாண்டின் வரிக்குப் பிந்தைய லாபமானது 269 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் தீரஜ்.ஜி. ஹிந்துஜா, "இரண்டாவது காலாண்டில் துறையின் ஒட்டுமொத்த விற்பனை 52 சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக அசோக் லேலாண்ட் நிறுவனமும் சரிவு கண்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் சீரான வகையில் செயல்பட்டுள்ளது. எங்களது செலவு குறைப்பு நடவடிக்கைகள் பயனளித்துள்ளது" என்று கூறினார்.
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவில் அசோக் லேலாண்ட் நிறுவனம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் வேலை நாட்களையும் தொடர்ந்து குறைத்து வருகிறது.
இதையும் படிக்க: உற்பத்தியைத் தொடர்ந்து குறைத்து வரும் 'மாருதி சுசுகி'