சென்னை தரமணி சட்டக் கல்லூரி வழியாகச் செல்பவர்களுக்கு மென்ஸ் பியூட்டி பார்லரின் அறிவிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். கரோனா பேரிடருக்கு மத்தியில் களத்தில் எந்நேரமும் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு சிகை அலங்காரம் இலவசம் என்ற அறிவிப்புதான் அது.
கரோனா காலத்தில் சுமாராக 4 மாதங்களுக்கு மேல் சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை. பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சலூன் கடை உரிமையாளர்கள் பலர் விலையை உயர்த்தினர்.
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் சிகை அலங்காரம் செய்யும் கலைஞர் அருணகிரி, கரோனா முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக சிகை அலங்காரம் செய்யப்படும் என போர்டு வைத்தார். அதில் சாமானியர்களுக்கு விலை குறைத்தும், முன்கள பணியாளர்களுக்கு இலவசமாகவும் செய்யப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அருணகிரி 16 ஆண்டுகளாக சிகை அலங்காரம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 10 ஆண்டுகளாக சொந்தமாக சலூன் கடை நடத்திவருகிறார். கடந்த ஆண்டு தரமணியில் மற்றுமொரு சலூன் கடையைத் திறந்த இவர், தனது வாழ்க்கை வரும் காலங்களில் ஏறுமுகமாக இருக்கும் என்றே நம்பினார். இந்தாண்டு கரோனா பேரிடர் அருணகிரியின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. கரோனா ஊரடங்கில் தொடர்ச்சியாக கடையைத் திறக்காமல் இருந்ததால் பொருளாதார நெருக்கடியில் தவித்தார்.
தான் அனுபவித்த துயரங்கள் பிறருக்கு ஏற்படக் கூடாது என நினைத்த இவர், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் கடையைத் திறந்ததும் சாமானியர்களுக்கு சில சலுகைகளைக் கொடுத்தார். தனது கடைக்கு முன்னால் "கரோனா காலத்தில் மக்களின் துயரத்தில் நானும்" எனத் தலைப்பிட்ட போர்டில் கட்டிங் ரூபாய் 60, ஷேவிங் ரூபாய் 30, அடையாள அட்டையைக் காட்டும் களப்பணியாளர்களுக்கு இலவசம் என்றும் தனது சேவையைத் தொடங்கினார், அருணகிரி.
தனது இரண்டு கடைகளிலும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக சிகை அலங்காரம் செய்வது மனநிறைவைத் தருவதாகக் கூறும் அருணகிரியிடம் விலைக் குறைப்பு குறித்து கேட்டபோது, ”ஊரடங்கு காலத்தில் பலர் உணவு பொருள்களை இலவசமாக வழங்கினர். அவற்றை நானும் வாங்கி சாப்பிட்டு பசியாறியிருக்கிறேன்.
அந்த நேரத்தில் என்னிடம் பிறருக்கு உதவுமளவிற்கு பணமில்லை. தற்போதும் மக்கள் பொருளாதார நெருக்கடியில்தான் உள்ளனர். என்னால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்பதற்காகக்தான் விலையைக் குறைத்துவிட்டேன்”என்றார்.
மென்ஸ் பியூட்டி பார்லரில் கட்டிங் செய்வதால் 60 முதல் 70 ரூபாய் மிச்சமாகிறது என வாடிக்கையாளர் சண்முகவேல் தெரிவிக்கிறார். தினக்கூலிக்குச் செல்லும் தங்களைப் போன்ற வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் கூட பெரிய தொகைதான் எனக் கூறும் வாடிக்கையாளர் செந்தில்குமார் ஆனந்த், விலை குறைவானாலும் பிற கடைகளை விட இங்கு நன்றாக சிகை அலங்காரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கிறார்.
’காலத்தினாற் செய்த உதவி’ என்ற குறளுக்கேற்ப அருணகிரி, பொதுமக்களின் இக்கட்டான சூழலைப் புரிந்துகொண்டு உதவி செய்து வருகிறார். இந்த விலைக் குறைப்பு செயலால் அருணகிரி தொழில்ரீதியாக பல மிரட்டல்களைச் சந்தித்து வருகிறார். இது தொடர்பாக அருணகிரியிடம் கேட்கும்போது, புன்னகையுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்கள் நமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
“விலை குறைப்பு எனக்கு பொருளாதார ரீதியாக சிரமத்தை உண்டு பண்ணினாலும்கூட, ஒரு நபருக்கு 40 ரூபாய் குறைப்பது அவர்களுக்கு 1 கிலோ அரிசி வாங்க உதவும். 20 கட்டிங் செய்தால் 20 குடும்பங்களுக்கு அரிசி வாங்க உதவியது போல மகிழ்ச்சியாகவுள்ளது”என்கிறார் அருணகிரி.
பிறர் துன்பத்தைத் தன்னுடையதாக எண்ணி தானாக முன் வந்து உதவும் சிகை அலங்காரம்கலைஞர் பாராட்டுக்குரியவர். தன்னலம் இல்லாத உதவி ஞாலத்தின் மாணப் பெரிது!