தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கல்லுாரிகளில் சேர்வதற்கு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் விண்ணப்பம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்க அலுவலர் ஒருவர் கூறும்போது, 'தமிழ்நாட்டில் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், 518 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 14 அரசுக் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் நான்கு லட்சத்து 40 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் பணி தொடங்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் 10 வேலை நாட்கள் விண்ணப்பங்கள் தொடர்ந்து வழங்கப்படும். அதன்பின்னர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள துறைகளுக்கான இடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேருவதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் தவிர்த்து, பிற பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுவருகிறது.
கடந்தாண்டு வரை பள்ளிக் கல்வித் துறையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரத்து 200 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு முதல் 600 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கான மதிப்பெண்கள் தவிர்த்து, பிற பாடங்களுக்கு உரிய 400 மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயார் செய்து வெளியிடப்படும். இதற்குரிய விதிமுறைகள் விரைவில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 74 ஆயிரத்து 500 இடங்கள் உள்ளன. கல்லூரிகளில் போதுமான உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 வசூல் செய்யப்படும். விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன' என அவர் தெரிவித்தார்.