சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்டப் புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவரைக் கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.