கரோனா அச்சுறுத்தலை கருத்தில்கொண்டும், மாணவர்களின் நலன் கருதியும் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள், மேலும், முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஆனால், பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உள்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சரஸ்தபுத்தே கூறும்போது, ”தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்த அரசு தயாராக இல்லை என்று வெளியான தகவல் தவறானது.
பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசிடம் திட்டவட்டமாக கூறியுள்ளோம். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் மற்றும் கல்விக் கழகம் கடிதம் எழுதி உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் எந்த விளக்கத்தையும் தமிழ்நாடு அரசு அளிக்கவில்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் தொடர்ச்சியாக தினம்தோறும் ஒவ்வொரு விதமான செய்திகள் வெளி வருவதால் மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர்.
இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில், அரியர் மாணவர்களின் பழைய மதிப்பெண்களை ஒப்பிட்டே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடியும்” என்று தெரிவித்தார்.