சென்னை: சிலைக் கடத்தல், சிலைகளைப் பதுக்கி வைத்திருத்தல், சட்டவிரோதமாகப் பழங்கால சிலைகளை விற்பனை செய்தல் பற்றிய தகவல்கள் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டாத வகையில், தகவல் அளிக்கும் விதமாக 'பிளாக் செயின்' தொழில்நுட்பம் மூலம் புகார் அளிக்க http://complaints.tnidols.com என்ற இணையதளம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த இணையதள முகவரியைப் பயன்படுத்தி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றுபவர்களும் தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டாமல் பணியில் உள்ள குறைகளை எடுத்துக்கூறலாம். முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் காவல் துறையில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகார்கள் மற்றும் குறைகளைப் பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதே பிளாக் செயின் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள தரவுகளை ரகசியமாக சேமிக்கவும், கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதே பிளாக் செயின் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில், ஏற்கனவே டிஜிட்டல் பதக்கங்கள் மற்றும் சோல்ஃபவுண்ட் டோக்கன்கள் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதே பிளாக் செயின் தொழில்நுட்ப முறையில் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கும் வகையில் இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் புகார்களைப் பெறுவதன் மூலம், புகார்களின் முன்னேற்றம் மற்றும் வழக்கின் தன்மையை கண்காணிப்பது எளிதாக மாறும். ஒவ்வொரு புகார்கள் தொடர்பாகவும் அதற்கென நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து 7 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்ய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
மேலும் சரியான தகவலை அனுப்பும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் டோக்கனாக பரிசு வழங்கப்படும் எனவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் சிலை திருட்டில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது; 6 சிலைகள் மீட்பு