தமிழகத்தை பொறுத்தவரையில் மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுதுவதற்கு ஜூலை மாதம் தங்களின் பெயர்களை பள்ளிகள் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் பெயர் பட்டியல் பொதுத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கு பதிவு எண்கள் ஒதுக்கீடு செய்யும் முன்னர் வரையில் திருத்தம் செய்யப்படும்.
பள்ளியில் இருந்து மாணவர்கள், பெற்றோர், தலைமை ஆசிரியர் அளிக்கும் பட்டியல் அடிப்படையிலேயே இறுதியாக மாணவர்களுக்கு பதிவு எண்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் நன்றாக படிக்காத மாணவர்களை பொதுத் தேர்வெழுதுவதற்கு முன்னர் பதிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் தங்கள் பள்ளிகளின் தேர்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தில் தேர்வெழுத அனுமதிப்பது இல்லை. அவர்களை தனித்தேர்வர்களாக தேர்வெழுத வைக்கின்றனர். இதனால் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகள் மூலமாக தேர்வெழுதும் வாய்ப்பினை இழக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக பதிவு செய்ததாக தேர்வுக்கு முன் தேர்வுத்துறை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், எட்டு லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் பதிவு செய்தனர். ஆனால் தேர்வு முடிவு அன்று அதே எண்ணிக்கையை எட்டு லட்சத்து 42 ஆயிரத்து 512 என மாற்றி அறிவித்தது. மீதமுள்ள 18 ஆயிரத்து 595 மாணவர்களின் நிலை என்ன?
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக பதிவு செய்ததாக தேர்வுக்கு முன் தேர்வுத்துறை தகவலில் எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்கள் ஆடங்குவர். ஆனால் தேர்வு முடிவின் போது எட்டு லட்சத்து ஆயிர்த்து 772 என அளித்தது. 14 ஆயிரத்து 846 மாணவர்களின் நிலைமை என்ன?
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்கள் பதிவு செய்தனர். தேர்வு முடிவின் போது 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 என கூறப்படுகிறது. 21 ஆயிரத்து 759 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லையா? என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில், மொத்தமாக 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 55 ஆயிரத்து 200 மாணவர்கள் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவில்லை. பதிவு செய்த மாணவர்கள் தேர்வினை எழுதாமல் இருந்துது தற்பொழுது வெளிவந்துள்ளது.இந்த மாணவர்கள் தேர்வு எழுதாததை குறித்து தமிழ்நாடு அரசு விசாரித்து தீர்வு காணவேண்டும் என கல்வியாளர் வலியுறுத்துகின்றனர்.