சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அவரது துணைவியார் மம்தா முன்னிலையில் பொங்கல் குலவையிட்டும், ஆணையருக்கு பரிவட்டமும் கட்டப்பட்டது.
இதன் பின்பாக பெண் காவலர்கள் வரைந்த கோலப்போட்டியினை பார்வையிட்டு சிறப்பாக வரையப்பட்ட கோலத்திற்கு காவல் ஆணையர் மதிப்பெண் வழங்கினார். அதன் பின் நடத்தப்பட்ட உறியடி போட்டியில் ஆயுதப் படையைச் சேர்ந்த ஆண் காவலர்கள் வேஷ்டியிலும், பெண் காவலர்கள் சேலையிலும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பெண் காவலர் ஒருவர் வெற்றி பெற்றார். இதற்குப் பின் நடந்த மல்லர் கம்பம் ஏறும் போட்டியில் ஆறு வயது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தங்களுடைய உடலை வில் போல வளைத்து கம்பத்தில் ஏறி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தனர்.
இதனையடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் ஒன்றிணைந்து சிலம்பு கம்பை வாளுக்கு நிகராக காற்றில் சுழற்றினர். இறுதியாக அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அவரது துணைவியார் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சமத்துவப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த சென்னை பூர்வகுடிகள்!