சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், செம்பி. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த அனைவரும் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், படத்தின் இறுதியில் இயேசு குறித்த வாக்கியம் ஒன்று போடப்பட்டது. அதாவது 'உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்திலும் செலுத்து - இயேசு' என்று போடப்பட்டிருந்தது.
இதற்கு பத்திரிகையாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இயக்குநர் பிரபு சாலமன் தொடர்ந்து தனது படங்களின் மூலம் மத பரப்புரை செய்துவருகிறார் என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பிரபு சாலமனிடம் கேள்வி எழுப்பியபோது, 'கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் கிடையாது. மதம் பரப்ப இயேசு வரவில்லை. அன்பு மட்டுமே எனது நோக்கம்' என்றார்.
சினிமா என்பது எல்லோருக்கும் பொதுவானது; இங்கு மத பரப்புரை செய்வது தேவையில்லாதது என்று பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் பிரபு சாலமன் உடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சிலர் இது அவரது தனிப்பட்ட விருப்பம். ஒருவரது தனிப்பட்ட விருப்பதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Actor Siddharth: வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்ட முயற்சி: சித்தார்த் கிண்டல்