புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் திமுக தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பல்வேறு துறைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடு குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொல்லியல் துறை குறித்து பேசுகையில், “கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாடு மட்டுமின்றி உலக தமிழர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள நாட்டில் எந்த மாநிலத்தைவிடவும் இல்லாத வகையில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கபடும்.
கீழடியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டட அமைப்புகள், உறைகிணறுகள், தொழிற்பகுதிகளை மக்களும் எதிர்கால தலைமுறையினரும் நேரடியாக கண்டு உணரும் வகையில் கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதல் கட்டமாக, சங்க கால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வு செய்யப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80.26 கோடி ரூபாயும், தொல்லியல் துறைக்கு 29.43 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.