சென்னை: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் மாதிரி சேவை உரிமைச் சட்ட மசோதாவை இன்று (செப்.1) வெளியிட்டுள்ளார்.
அரசு துறை அலுவலங்களில் இருந்து மக்கள் சேவைகளைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். நாட்டின் ஒரு சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்தால் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது. அதன்படி இச்சட்டம் நடப்பு கூட்டத் தொடரிலேயே அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறையான ரசீது
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் வெங்கடேசன், "தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான அரசு துறைகளில் என்னென்ன சேவைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து தெளிவாக தெரியப்படுத்துவதில்லை.
முதலில் இதனைப் போக்க அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் சேவைகள், அதனை பெறுவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விவரங்களை தெளிவாக வெளியிட வேண்டும்.
ஏதேனும் ஒரு சேவையைப் பெற பொதுமக்கள் விண்ணப்பித்தால் அதற்கு தனித்துவ அடையாள எண்ணுடன் முறையான ரசீது வழங்க வேண்டும். அந்த எண் வாயிலாக சேவையின் நிலையை இணைய வாயிலாக அறிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
உரிய நேரத்திற்குள் சேவை வழங்கப்படாவிட்டால் அதனை பயனாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். சேவை நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பயனாளருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
சுதந்திரமான சேவை ஆணையம்
சேவை வழங்குவதில் காலம் தாழ்த்தப்பட்டாலோ, தவறு நடந்தாலோ அத்துறையிலேயே புகார் அளிக்க உயர் அலுவலரை நியமிக்க வேண்டும். அங்கு 15 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படவில்லையெனில் சுதந்திரமான சேவை ஆணையத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தீர்வு காண வேண்டும். உரிய நேரத்தில் சேவையை வழங்காவிட்டால் அரசு அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
சேவை ஆணையத்தின் அலுவலர்கள் நியமன குழுவில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற வேண்டும். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இவை பெயர் அளவுக்கே உள்ளது.
கண்காணிப்பு மூலமே தீர்வு
தமிழ்நாட்டில் இதுபோன்ற தவறு நடைபெறாமல் இருக்க, அரசு அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்டு முறையான சட்டத்தை இயற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெற லஞ்சம் வாங்குவதை தடுத்தால், அதனை மீறி மற்றொரு வழியில் தவறு நடைபெறுவது சாத்தியம்தான்.
என்றாலும் தற்போது லஞ்சம் கொடுக்காமல் வேலையை செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு எந்த அமைப்பும் இல்லை. தவறு நடந்தாலும் கண்காணிப்பு மூலமே இதற்கு தீர்வு காண முடியும். அரசிடம் இருந்து மக்கள் பெறும் சேவைகள் விரைவாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: புளியந்தோப்பு விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை