சென்னை: அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ''அறப்போர் இயக்கம் 16.8.2021அன்று முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது 2011 முதல் 2021 வரை ரூ.76 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்தார் என்று, ஆதாரங்களுடன் அனுப்பிய புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் 15.09.2021அன்று FIR பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.
FIR-ல் 2016 முதல் 2021 வரை எடுத்து ரூ.28 கோடி அளவிற்கு, இந்த 5 ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்தார் என்று வழக்குத் தொடர்ந்து DVAC(Directorate of Vigilance and Anti-Corruption) விசாரித்து வந்தது. கடந்த வாரம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட பத்திரிகை செய்தி மூலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணை மேற்கொள்ள அனுமதி கேட்டு தமிழ்நாடு ஆளுநருக்கு 12.9.2022அன்றே கடிதம் அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட 10 மாதங்களாக அனுமதி தராமல் ஆளுநர் வைத்திருப்பது ஊழல்வாதிகளைக் காப்பாற்றும். அறப்போர் புகாரில் விசாரணை நடந்த கே.சி. வீரமணி வழக்கிலும் மற்ற ஊழல் வழக்குகளிலும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்'' என கடிதம் அனுப்பி உள்ளார்.
''தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையைத் துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் தமிழ்நாடு ஆளுநருக்கு 3.7.2023அன்று சட்டத்துறை அமைச்சர் கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்திற்குப் பதிலளித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட தகவலில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்குத் தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவனில் இருந்து பெறப்படவில்லை என கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீண்டும் ஆளுநருக்கு பதிலளித்து கடிதம் எழுதினார். அதில், கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு 12.9.2022 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விழிப்புணர்வு ஆணையத்தின் பரிந்துரை அனைத்தும் அடங்கியிருக்கிறது.
298 நாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை பெற்றுக்கொண்டு கோப்பை பெற்றுக் கொண்டற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு, இன்று உறுதி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல.
ராஜ்பவன் வாதப்படி வைத்துக் கொண்டால் கூட நான் ஆளுநருக்கு கடிதம் எழுதும் வரை அந்த கோப்பு குறித்து எந்த விவரமோ, விளக்கமோ கேட்டு தமிழக ஆளுநரிடமிருந்து கடிதமும் வரவில்லை. இது மட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில் இசைவாணை கோரி லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை அடங்கிய ஒரிஜினல் கோப்பு ஆளுநருக்கு 15.5.2023 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' எனவும் அந்த கடிதத்தில் விளக்கம் அளித்து இருந்தார்.